மராட்டிய அரசில் இருந்து சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா விலகல்? ராஜூ ஷெட்டி எம்.பி. பேட்டி
மராட்டிய அரசில் இருந்து சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா விலகுமா? என்ற கேள்விக்கு அதன் தலைவர் ராஜூ ஷெட்டி பதில் அளித்தார். விவசாயிகள் போராட்டம் மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநி
மும்பை,
மராட்டிய அரசில் இருந்து சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா விலகுமா? என்ற கேள்விக்கு அதன் தலைவர் ராஜூ ஷெட்டி பதில் அளித்தார்.
விவசாயிகள் போராட்டம்மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகள் வீதியில் இறங்கி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்தது. இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டதாகவும், மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட கூடாது என்றும் விவசாய துறை மந்திரி சடபாவு கோட் சமீபத்தில் அறிவித்தார்.
விவசாயிகளுடன் கலந்து பேசாமல், தன்னிச்சையாக மந்திரியே இந்த அறிவிப்பை வெளியிட்டதாக பல்வேறு விவசாய அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால், அவருக்கு நெருக்கடி முற்றுகிறது.
ராஜூ ஷெட்டி எம்.பி. பேட்டிஇதனிடையே, விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா கட்சியின் தலைவர் ராஜூ ஷெட்டி எம்.பி., நேற்று மும்பையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–
விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் முடிவுகளை பா.ஜனதா தலைமையிலான அரசால் எடுக்க முடியாது. பா.ஜனதா முழுவதும் அறிவுஜீவிகள் நிறைந்த கட்சி. இருந்தாலும், விவசாயிகளை பற்றி சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை.
இந்த அணுகுமுறை பா.ஜனதாவை இக்கட்டான சூழலுக்கு கொண்டு போய் விட்டு விடும். இந்த அரசின் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அவர்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும்.
செயற்குழு கூட்டம்சாங்கிலி மாவட்டம் மீரஜ் நகரில் விரைவில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, மராட்டிய அரசில் நீடிப்பதா, இல்லையா? என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும். எங்கள் கட்சியை சேர்ந்த சதபாவு கோட், விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். மாநில செயற்குழு முன்பு அவர் ஆஜராகி, அவரது நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ராஜூ ஷெட்டி எம்.பி. தெரிவித்தார்.
மாநில பா.ஜனதா தலைமையிலான அரசில் சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா சார்பில் அங்கம் வகிக்கும் ஒரே மந்திரி சதபாவு கோட் ஆவார். மேற்கு மராட்டியத்தின் சில மாவட்டங்களில் பா.ஜனதாவை பலப்படுத்த ராஜூ ஷெட்டியின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.