விவசாயிகள் போராட்டம் எதிரொலி: அக்டோபர் 31–ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் முதல்–மந்திரி உறுதி

அக்டோபர் 31–ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-06 23:00 GMT

மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, அக்டோபர் 31–ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான, லாபகரமான விலை நிர்ணயம் மற்றும் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகளின் காலவரையற்ற போராட்டம் வெடித்தது. கடந்த 1–ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம், நேற்று 6–வது நாளாக நீடித்தது.

இதனிடையே, ஆங்காங்கே விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பால் வேன்களை விவசாயிகள் மறித்து பாலை சாலையில் கொட்டி வேன்களுக்கு தீ வைத்து எரித்தனர். அத்துடன் காய்கறிகளையும், பழங்களையும் சாலையில் வீசி எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு காய்கறி சப்ளை அடியோடு முடங்கியது. காய்கறி, பழங்களின் விலை பல மடங்கு எகிறியது. இதனால், இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது.

அரசுக்கு நெருக்கடி

பாரதீய ஜனதா அரசை கண்டித்து விவசாயிகள் மேற்கொண்ட இந்த போராட்டத்தில், சிவசேனா, சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர். இது பா.ஜனதாவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பரபரப்பான இந்த சூழலில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நகர்ப்புற மேம்பாடு தொடர்பாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடுடன் மும்பையில் நேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம், விவசாயிகளின் போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் கூறியதாவது:–

உறுதியான நம்பிக்கை

வருகிற அக்டோபர் 31–ந் தேதிக்குள், தேவையோடு இருக்கும், விரக்தியில் வாடும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இதற்கான நடைமுறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மராட்டிய வரலாற்றில் இது மிகப்பெரிய பயிர்க்கடன் தள்ளுபடியாக அமையும் என்று என்னால் உறுதியான நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

மராட்டியத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 307 ஏ.பி.எம்.சி. சந்தைகளில், நேற்று 300 சந்தைகள் செயல்பட்டன. 4 சந்தைகள் வார விடுமுறையில் இருக்கின்றன. 3 சந்தைகள் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தால் செயல்படவில்லை. ஏறத்தாழ 85 சதவீத சந்தை நடவடிக்கைகள் சீரடைந்துவிட்டன.

விவசாயிகளின் போராட்டத்தின் போது நடைபெற்ற சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து சம்பவங்கள் அடங்கிய அறிக்கை தொகுப்பையும் நான் ஆய்வு செய்தேன். இவை அனைத்தும் விவசாயிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் கட்சியினரால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

வெங்கையா நாயுடு பேட்டி

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் பேசும்போது, மாநிலங்கள் அதன் நிதிநிலையை கருத்தில் கொண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யலாம் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டினார். அத்துடன், விவசாயிகளின் நெருக்கடிக்கு முந்தைய காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம் என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை குற்றம்சாட்ட கூடாது என்றும் வலியுறுத்தினார்.

5 ஏக்கருக்கும் குறைவான...

பயிர்க்கடன் மீதான தேவேந்திர பட்னாவிசின் அறிவிப்பை தொடர்ந்து, ரூ.30 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவாரிடம் கேட்டதற்கு, ‘‘5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் 1 கோடியே 7 லட்சம் விவசாயிகள், பயிர்க்கடன் பெற தகுதியுடைவர்கள் ஆவர். இந்த நிதி சுமை வரி அல்லாத வருவாய், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதம் ஆகியவை மூலம் திரட்டப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்