சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லையில் பூட்டி கிடக்கும் சோதனை சாவடிகள்

சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லையில் பூட்டி கிடக்கும் சோதனை சாவடிகளை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2017-06-06 22:00 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் உட்கோட்டத்தில் சோமங்கலம் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் கல்லூரிகள் மற்றும் சிப்காட் உள்ளது. இவை அனைத்தையும் இணைக்கும் முக்கிய சாலைகளான தாம்பரம்–சோமங்கலம் சாலையில் எருமையூர் பகுதியிலும், குன்றத்தூர்–ஸ்ரீபெரும்புதூர் சாலையில் புதுநல்லூர் பகுதியிலும்  கடந்த 2009–ம் ஆண்டு போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. 

அப்போது அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு இருந்ததால், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுவோர் அந்த வழியாக தப்பித்து சென்றாலும், போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இதனால் கொள்ளையர்கள் மிகுந்த அச்சப்பட்டனர். போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டதால் குற்றச்சம்பவங்களும் குறைந்து
வந்தன. 

இதையடுத்து நடுவீரப்பட்டு அருகே காந்தி நகர் கூட்டுச்சாவடியில் தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் புதியதாக சோதனை சாவடி கட்டிக்கொடுக்கப்பட்டது. இதை போலீசார் பயன்படுத்தி வந்தனர்.

பூட்டி கிடக்கிறது

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த 3 போலீஸ் சோதனை சாவடிகளும் திறக்கப்படாமல் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபடுவது இல்லை என்று தெரிகிறது. இதனால் குற்றவாளிகள் அச்சமின்றி இந்த சாலை வழியாக தப்பிச் சென்று வருகின்றனர். 

இந்த பகுதியில் தொடர்ந்து 4 நாட்களில் 4 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது. வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் தங்கி இருப்பதால் குற்ற சம்பவங்களும் அதிகரித்து உள்ளது. இந்த போலீஸ் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பூட்டி கிடக்கும் 3 போலீஸ் சோதனை சாவடிகளையும் உடனடியாக திறந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்