டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பெண்கள் மீண்டும் போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பெண்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-06 22:45 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் ஒரே கட்டிடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கடந்த மாதம் 22-ந்தேதி கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றிகொள்வதாக உறுதியளித்னர்.

இந்தநிலையில் அதிகாரிகள் கொடு த்த வாக்குறுதிபடி பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று காலை பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். அப்போது ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது அங்கு திரண்டு இருந்த பெண்கள் மீண்டும் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணன் ஆகியோர் விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைகளை மாற்ற வேறு இடத்தில் எங்கும் இடம் கிடைக்கவில்லை. இதனால் 3 மாதம் கூடுதலாக அவகாசம் கொடுக்குமாறு அதிகாரிகள் பெண்களிடம் கேட்டனர்.

ஆனால் பெண்கள் டாஸ்மாக் கடைகளை மாற்றியே ஆக வேண்டும் என்று தெரிவித்தனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அதிகாரிகள், டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் பெண்கள் கடை முன்பு அமர்ந்து இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்