தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் பலி; 6 பேர் படுகாயம்

கோவில் விழாவிற்கு சென்றபோது, விராலிமலை அருகே தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2017-06-06 23:00 GMT
விராலிமலை,

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர்தாஸ். இவரது மனைவி குணசுந்தரி (வயது 45) மற்றும் மகன் கார்த்திக், மகள் பிரியா, உறவினர்கள் சுப்புலெட்சுமி, சவுமியா ஆகியோர் ஒரு காரில் திருவள்ளூரில் இருந்து விருதுநகரில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக திருச்சி வழியாக வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் பாட்ஷா என்பவர் ஓட்டினார்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே கசவனூர் என்ற இடத்தில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் இடுபாடுகளில் சிக்கிய 7 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். இதில் சிறிது நேரத்தில் குணசுந்தரி பரிதாபமாக இறந்தார்.

6 பேர் படுகாயம்

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் படுகாயமடைந்த சங்கர்தாஸ், கார்த்திக், பிரியா, சுப்புலெட்சுமி, சவுமியா, டிரைவர் பாட்ஷா ஆகிய 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் குணசுந்தரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்