அறையை காலி செய்யாததால் அனைவருக்கும் கல்வி இயக்க மையத்திற்கு சீல் வைப்பு

அறையை காலி செய்யாததால் அனைவருக்கும் கல்வி இயக்க மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2017-06-06 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தென்கீழ்அலங்கத்தில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள 2 அறைகளில் 2002-ம் ஆண்டு முதல் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையம் செயல்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கூடுதல் அறைகள் தேவைப்பட்டதால் வட்டார வள மையத்தை காலி செய்ய சொல்லி கல்வித்துறை அதிகாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் அந்த மையத்தை காலி செய்யவில்லை. இதனால் நேற்று மாலை நகரமைப்பு அதிகாரி வரதராஜன், உதவி அதிகாரி ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையத்தின் ஒரு அறையின் கதவை பூட்டி சீல் வைத்தனர்.

இதை அறிந்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு அறையை பூட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டபோது, பணியாளர்கள் அனைவரும் அந்த அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டனர். எங்களது மேல் அதிகாரிகள் வந்த பின்னர் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்தநிலையில் திடீரென அந்த அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து அமர்ந்திருந்தனர். சீல் வைக்கப்பட்ட தகவலை அறிந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.

காலஅவகாசம்

பின்னர் அவர் கூறும்போது, வட்டார வள மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எந்த தகவலும் தெரிவிக்காமல் திடீரென அறைக்கு சீல் வைத்துள்ளனர். எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால் இன்னும் 5 நாட்கள் காலஅவகாசம் கேட்டு இருப்போம் என்று கூறினார்.

பணியாளர்கள் கூறும்போது, நாங்கள் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து இதே அறையில் வட்டார வள மையம் செயல்பட அனுமதிக்கும்படி வலியுறுத்தினோம். அவரும் மாநகராட்சி ஆணையாளரிடம் பேசினார். ஆனால் திடீரென வந்து அறைக்கு சீல் வைத்துவிட்டனர். பள்ளிக்கு கூடுதல் அறை தேவைப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் 175 பேர் தான் படிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அறைகள் உள்ளன. தலைமை ஆசிரியரின் வற்புறுத்தல் காரணமாக தான் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் 12 பேர் பணியில் உள்ளோம். 122 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளித்து வருகிறோம். மேலும் பள்ளிகளுக்கு தேவையான புத்தகம் போன்ற உபகரணங்களையும் நாங்கள் தான் வழங்குவோம். சீல் வைக்கப்பட்ட அறையில் பள்ளிகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளன என்றார்.

புகார் அளிப்போம்

மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ் கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி வளாகத்தில் உள்ள 2 அறைகளில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் செயல்பட்டு வருகிறது. இவர்களை காலி செய்ய சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். 2 மாதம் காலஅவகாசம் கேட்டனர். பின்னர் ஜூன் 1-ந் தேதி காலி செய்து விடுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை காலி செய்யவில்லை. பள்ளிக்கு அறைகள் தேவைப்படுவதால் ஒரு அறைக்கு சீல் வைத்துள்ளோம். மற்றொரு அறைக்கு சீல் வைக்க சென்றபோது பணியாளர்கள் அனுமதிக்காததால் வந்துவிட்டோம். அந்த அறைக்கும் கண்டிப்பாக சீல் வைப்போம். உரிய அனுமதி இல்லாமல் தான் மையம் செயல்பட்டு வருகிறது. வாடகையும் செலுத்துவதில்லை. அவர்கள் காலி செய்யவில்லை என்றால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்போம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்