ஆவடியில் 300–க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஆவடி பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 300–க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது.
ஆவடி,
சென்னையை அடுத்த ஆவடி, நேரு பஜாரில் 450–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த பஜார் சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. இங்கு கடைகளை வைத்திருப்பவர்கள் பலர், சிறு கடை வியாபாரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் கடைகளுக்கு முன் கடைகள் அமைக்க அனுமதி கொடுத்திருந்தனர்.
அவ்வாறு அந்த கடைகளுக்கு முன்பாக பழக்கடை, துணிக்கடை என 300–க்கும் மேற்பட்ட சிறுகடைகள் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்தது. ஆவடி நகராட்சி ஒப்பந்ததாரர்களும் அந்த சிறுகடை வியாபாரிகளிடம் வரி வசூலித்து விட்டு ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
இதனால் சுமார் 40 அடி அகலமுள்ள பஜார் சாலை குறுகி, ஒத்தையடி பாதையாக மாறியது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த கடைகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் கடைகளை அகற்றக்கோரி ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு விடுத்தனர். ஆனாலும் வியாபாரிகள், அந்த கடைகளை அகற்றவில்லை என கூறப்படுகிறது.
அகற்றப்பட்டது
இந்தநிலையில் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 2 பொக்லைன் எந்திரத்துடன் ஆவடி பஜாருக்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 300–க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் ‘‘கடைகளை அகற்றினால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’’ எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கடைகளை அகற்றுவதை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுடனும் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர் கள் கலைந்து சென்றனர்.