கடையம் யூனியன் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கடையம் யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2017-06-06 20:45 GMT

கடையம்,

கடையம் யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

குடிநீர் தட்டுப்பாடு

நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் கீழக்கடையம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது புலவனூர் கிராமம். இங்குள்ள 10, 11–வது வார்டுகளில் ஜம்புநதியில் இருந்து குடிநீர் தொட்டி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இதே பகுதியில் உள்ள 12–வது வார்டு பகுதியில் உள்ளவர்களுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 10, 11–வது வார்டு மக்கள் தாமிரபரணி குடிநீர் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு செய்தும் இதுவரை தண்ணீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் 10, 11–வது வார்டு மக்களுக்கு பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் ஜம்புநதி ஆற்று தண்ணீர் கடந்த 2 வாரங்களாக வழங்கப்படவில்லை. வழக்கமாக வரும் ஜம்புநதி ஆற்று தண்ணீரும் வழங்கப்படவில்லை. பக்கத்து வார்டுக்கு வரும் தாமிரபரணி தண்ணீரும் வழங்கப்படவில்லை.

யூனியன் அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த அருந்ததியர் காலனி, வேத கோவில், அம்மன் கோவில், வடக்கு தெரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். குடிநீர் கேட்டு கடையம் யூனியன் அலுவலகத்தை காலி குடங்கள் மற்றும் சமையல் பாத்திரங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் அதிகாரிகள் வெளியே சென்றிருந்ததால் பேச்சுவார்த்தைக்கு யாரும் வரவில்லை. இதனால் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர்.

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெயஸ்ரீ, ஸ்தேவான் சேகர் மற்றும் போலீசார், சத்துணவு மேலாளர் சச்சின் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரமாக முற்றுகை போராட்டம் நடத்திய மக்கள் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையவில்லை.

இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்குள் (அதாவது நேற்று) தண்ணீர் வழங்கப்படும் என உறுதி கூறியதின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரமாக குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கடையம் யூனியன் அலுவலகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் செய்திகள்