இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஊட்டி,
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஊட்டி ஏ.டி.சி. திடலில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்ரி தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் பத்ரி கூறியதாவது:–
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் சிறுபான்மையின மக்களை வெகுவாக பாதிக்கும். இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைத்து, ஒற்றை கலாசார முறையை கொண்டு வர வழிவகுக்கும். இறைச்சிக்காக மாடுகள் விற்பதை தடை செய்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பொதுமக்களின் உணவு உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது. எனவே, மத்திய அரசு இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.