கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்த இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு; மாநில தலைவர் உள்பட 28 பேர் கைது
கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்த இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு; சாலை மறியல் மாநில தலைவர் உள்பட 28 பேர் கைது
தேனி,
கம்பத்தில் இறந்த கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்த இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தேனியில் சாலை மறியல் செய்தனர். மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனுமதி மறுப்புதேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால் சாமி கோவில் பட்டத்து காளை நேற்று இறந்தது. இந்த காளைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தேனிக்கு வந்தார். அவருடன், மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கம்பத்திற்கு புறப்பட்டுச் செல்ல முயன்றனர்.
தேனி–பெரியகுளம் சாலையில் உழவர் சந்தை நுழைவு வாயில் அருகே அவர்கள் வந்த காரை போலீசார் நிறுத்தினர். கம்பத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் கம்பத்திற்கு செல்ல அனுமதி அளிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர். தாங்கள் கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி வந்து விடுவோம் என்று இந்து முன்னணி அமைப்பினர் கூறினர்.
சாலை மறியல்ஆனால், தொடர்ந்து போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடை முன்பு நின்று போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது இந்து முன்னணியை சேர்ந்த சிலர் போலீசாரை கண்டித்து சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.
பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கையை பிடித்து கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இன்ஸ்பெக்டரை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷமிட்டனர். வேறு அதிகாரி வந்தால் தான் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றனர்.
28 பேர் கைதுஇதையடுத்து தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது அங்கு வந்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்தி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை கைது செய்தார். அப்போது நிர்வாகிகள் சிலர் பெரியகுளம் சாலையில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட மொத்தம் 28 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பெரியகுளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கைது நடவடிக்கைக்காக பயணிகளை பரிதவிக்க விட்ட போலீசார்
தேனியில் இந்து முன்னணி அமைப்பினர் நேற்று சாலை மறியல் செய்தனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்கு அங்கு போலீஸ் வாகனம் இல்லை. இதனால், அந்த வழியாக தேனியில் இருந்து அன்னஞ்சிக்கு சென்ற மினிபஸ்சை போலீசார் வழிமறித்தனர். அந்த மினி பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டனர். பின்னர், அந்த மினி பஸ்சில் கைது செய்யப்பட்டவர்களை ஏற்றி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், மினிபஸ்சில் பயணம் செய்த பயணிகள் நடுவழியில் வேறு பஸ்சுக்காக பரிதவிப்புடன் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் பயணிகள் ஏறிச் சென்றனர்.