தமிழ்நாட்டில் பா.ஜனதா மாற்று சக்தியாக உருவெடுக்கும் ஓசூரில், மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா பேட்டி

தமிழ்நாட்டில் பா.ஜனதா மாற்று சக்தியாக உருவெடுக்கும் என மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.

Update: 2017-06-06 04:37 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தூய்மை பாரதம் தொடக்க விழா, மோடி அரசின் 3 ஆண்டு கால நிறைவு விழா ஆலோசனைக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை (தனிப்பொறுப்பு) மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா நேற்று ஓசூர் வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் மோடி தலைமையிலான அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மோடி நிறைவேற்றிய திட்டங்கள், சாதனைகள், ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. நாடு முழுவதும் அடுத்த(ஜூலை) மாதம் முதல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படவுள்ளது. இதனால் நுகர்வோரும், பொதுமக்களும் மிகவும் பயனடைவார்கள்.

மோடி அரசில், 2 கோடி ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி திட்டத்தின் கீழ், முந்தைய அரசில் 2,620 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ததை, தற்போது 12,777 மெகாவாட்டாக உயர்த்தியுள்ளோம். இதேபோல், விவசாயம், கல்வி, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிறைய சீர்திருத்தங்கள், மாற்றங்களை மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது.

பேறுகால விடுப்பு

பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 வாரமாக இருந்ததை மோடி அரசு 26 வாரமாக உயர்த்தியுள்ளது. மேலும் அவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடத்தில் மழலையர் காப்பகம்(கிரீச்) அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியமாக முந்தைய அரசில், நாளொன்றுக்கு 246 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது மோடி அரசில், 350 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் சி பிரிவின் கீழ் வருவதால், இங்கு குறைந்தபட்ச ஊதிய தொகை நாளொன்றுக்கு 350 ரூபாய் ஆகும். அதேபோல், பி பிரிவில், 437 ரூபாயும், சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகர பகுதிகளில்(ஏ பிரிவு) நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் 523 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாற்று சக்தியாக உருவெடுக்கும்

தொழிலாளர்கள் நிறைந்த ஓசூரில் இ.எஸ்.ஐ. இன்சூரன்ஸ் திட்டத்தில் 1,10,000 தொழிலாளர்கள் இணைந்துள்ளனர். மேலும் ஓசூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, 100 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக விரைவில் மேம்படுத்தப்படும். வருகிற 2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு முனைப்புடன் உள்ளது.

மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அவரது செல்வாக்கு முன்பை விட 44 சதவீதம் உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சியினர் சிறுபான்மை மக்கள் மற்றும் சாதி அரசியல் மூலம் வாக்கு வங்கியை தக்க வைக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வரும் தேர்தலில், அவை எடுபடாது. வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ஜனதா மாற்று சக்தியாக உருவெடுக்கும். அதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு

இதைத் தொடர்ந்து ஓசூர் பஸ் நிலையத்தில் தூய்மை பாரதம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர் ராஜி, ஓசூர் நகர தலைவர் சங்கர், நகர பொதுச்செயலாளர் தங்கராஜ், மாவட்ட மகளிரணி தலைவி கஸ்தூரி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட கலெக்டர் கதிரவன், ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா ஆகியோர் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயாவிற்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்