விவசாயிகளின் தொடர் போராட்டம்: மராட்டிய அரசுக்கு சிவசேனா கண்டனம்
விவசாயிகளின் தொடர் காலவரையற்ற போராட்டத்தை சுட்டிக்காட்டி மாநில அரசுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை,
பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், மாநில அரசை கண்டித்து சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:-
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றிருந்தால், முதல்-மந்திரி மீது அவர்கள் பூ மழை பொழிந்திருப்பார்கள். ஆனால், அரசில் அங்கம் வகிக்கும் சிலர், விவசாய துறை மந்திரி சதபாவு கோட்டை விவசாயிகளிடம் அழைத்து சென்று, அவர்களது ஒற்றுமையை குலைக்க முயற்சித்திருக்கிறார்கள். பிரித்தாளும் கொள்கையை மாநில அரசு பின்பற்றுகிறது. ‘வர்ஷா’ இல்லத்துக்கு சென்ற விவசாய அமைப்பு தலைவர்கள், அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதா? என்பதை தெளிவுபடுத்தட்டும்.
விவசாயிகள் அவமதிப்பு
பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் 35 லட்சம் முதல் 40 லட்சம் விவசாயிகள் வரை பயனடைவார்கள் என்று முதல்-மந்திரி சொல்கிறார். அப்படி என்றால், மரத்வாடா மண்டலத்தில் 2 ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் வைத்திருக்கும், பருவமழையை சார்ந்திருக்கும் விவசாயிகளின் நிலை என்ன?.
மாநில அரசு அதன் மரணத்தை தற்காலிகமாக தள்ளிப்போட முயற்சிக்கிறது. முதலில், வர்ஷா இல்லத்துக்கு விவசாயிகள் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். இறுதியில், அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
இந்த அரசின் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தான் போராட்டத்தை தொடர்கிறார்கள். விவசாயிகளுக்கு இடையே பிளவு ஏற்படுத்தி, தன்னுடைய அரசை தற்காலிகமாக காத்துக்கொள்ளும் வாய்ப்பை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பெற்றிருக்கிறார்.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.