பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு 2 மாதங்கள் பொறுமை காக்குமாறு கூறியதாக பேட்டி
பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது 2 மாதங்கள் பொறுமை காக்குமாறு சசிகலா தன்னிடம் கூறியதாக பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவை அவருடைய உறவினரும், அ.தி.மு.க.(அம்மா) அணி துணை பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன், நேற்று நேரில் சந்தித்து பேசினார். மதியம் 3.35 மணிக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வந்த அவர் 3.55 மணிக்கு சிறைக்குள் சென்றார்.
அவருடன் மனைவி அனுராதா மற்றும் ஒரு உறவுக்கார பெண் ஆகியோரும் சென்றனர். அவர் சசிகலாவை சந்தித்து 1¼ மணி நேரம் பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கட்சி விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு மாலை 5.20 மணிக்கு சிறையை விட்டு அவர் வெளியே வந்தார். அங்கு காத்திருந்த நிருபர்களுக்கு டி.டி.வி.தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை
நான் டெல்லியில் இருந்து சென்னை வந்த பிறகு, நேற்றே (அதாவது நேற்று முன்தினம்) பெங்களூரு வர வேண்டும் என்று கருதினேன். ஆனால் என்னால் வர முடியவில்லை. அதனால் இன்று (நேற்று) பெங்களூரு வந்தேன். சென்னையில் என்னை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து, கட்சி பணியில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.
அ.தி.மு.க.வில் 2 அணிகளையும் இணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்பதாகவும், அதுவரை கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்குமாறும் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அமைச்சர்கள் என்னிடம் கூறினர். அதன்படி நான் கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருந்தேன். இது சொல்லி 45 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இரு அணிகளும் இணைக்கும் விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
2 மாதங்கள் காத்திருங்கள்
அவர்கள்(தமிழக அரசு) பயந்துபோய் செயல்படுகிறார்கள். இதற்கான காரணம் விரைவில் தெரியவரும். சிறையில் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து, கட்சி நிலவரம் குறித்து பேசினேன். அப்போது அவர் என்னிடம், இன்னும் 2 மாதங்கள் பொறுமையாக இருங்கள். அதற்குள் கட்சியில் இரு அணிகளும் இணைகிறதா? என்று பார்க்கலாம். ஒருவேளை இந்த இணைப்பு நடக்காத பட்சத்தில் அடுத்தகட்டமாக முடிவு எடுக்கலாம் என்று என்னிடம் கூறினார்.
இந்த 2 மாத காலத்தில் நான் கட்சியை பலவீனம் அடைய விடாமல் பார்த்துக் கொள்வேன். என்னை கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்தவர் பொதுச் செயலாளர். அவரை தவிர வேறு யாரும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது. வானளாவிய அதிகாரம் படைத்த அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதற்கும், கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது.”
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
ஒரு எம்.பி., 11 எம்.எல்.ஏ.க்கள்
பரப்பன அக்ரஹாரா சிறைக்கு டி.டி.வி. தினகரன் வருகை தந்ததை அடுத்து போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கு செய்தி சேகரிக்க நிருபர்களும், ஊடகத்தினரும் அதிகளவில் குவிந்ததால் ஒரு பரபரப்பான சூழல் நிலவியது. முன்னதாக பெங்களூரு வந்த டி.டி.வி. தினகரனை அந்த கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் வா.புகழேந்தி வரவேற்றார்.
டி.டி.வி.தினகரனுடன் நாகராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், தங்கதுரை, ஜக்கையன், ஏழுமலை, கதிர்காமு, ஜெயந்தி ஆகியோர் வந்திருந்தனர். அதாவது ஒரு எம்.பி., 11 எம்.எல்.ஏ.க்கள் அவருடன் வந்திருந்தனர்.