காங்கிரசுடன் மோதல்: 2 என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
காங்கிரசுடன் மோதல்: 2 என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு 3 பேர் சபைக்குள் இருந்ததால் பரபரப்பு
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் 3 பேர் சபைக்குள்ளேயே அமர்ந்திருந்தனர்.
நாராயணசாமி எதிர்ப்புபுதுவை சட்டசபையில் முதல்–அமைச்சர் தொடர்பாக கவர்னரின் விமர்சனம் குறித்து காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக விவாதித்தனர். ஒட்டுமொத்தமாக கவர்னர் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.
அப்போது எழுந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபால், சென்டாக் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அரசு உரிய நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யாததால்தான் கவர்னர் இதில் தலையிட்டு உள்ளார் என்றார். அவரது கருத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாங்கள் முதலில் இருந்தே சட்டப்படிதான் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
12 குற்றச்சாட்டுகள்முதல்–அமைச்சருக்கு ஆதரவாக அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக பேசினார்கள். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து எழுந்து, இந்த அரசுக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை நான் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்–அமைச்சர் நாராயணசாமி, இது தவறான குற்றச்சாட்டு என்றார். முதல்–அமைச்சருக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசினார்கள். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரது மைக் இணைப்பினையும் துண்டிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
விசாரணை கமிஷன்நாராயணசாமி: நீங்கள் கடந்த 5 வருடமாக எத்தனை இடங்கள் வாங்கினீர்கள்? இதில் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளீர்கள். எனவே எங்களைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை. இதுதொடர்பாக விசாரணை கமிஷன் வைப்போம். ஒரு இடம்கூட வாங்காத ஊழல் பேர்வழிகளான நீங்கள் பேசக்கூடாது.
அமைச்சர் நமச்சிவாயம்: எப்படி எல்லாம் ஊழல் நடந்தது என்று இங்கு பேசலாமா?
அமைச்சர் கந்தசாமி: சி.பி.ஐ. வழக்கு உங்களுக்கு எங்களைப்பற்றி பேச என்ன தகுதி உள்ளது?
வெளிநடப்புதொடர்ந்து என்.எஸ்.ஜே.ஜெயபாலுவும், அசோக் ஆனந்து எம்.எல்.ஏ.வும் தங்களது விளக்கத்தை அளிக்க முயன்றனர். ஆனால் அவர்களை பேச சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தங்களை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு என்.எஸ்.ஜே.ஜெயபாலுவும், அசோக் ஆனந்தும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இத்தனை பிரச்சினைகள் நடந்தபோதும் மேலும் 3 என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான டி.பி.ஆர்.செல்வம், சுகுமாரன், கோபிகா ஆகியோர் அவையிலேயே இருந்தனர். அவர்கள் 3 பேரும் இந்த வாக்குவாதத்தில் பங்கெடுக்கவும் இல்லை. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து வெளிநடப்பிலும் ஈடுபடவில்லை.
என்.ஆர்.காங்கிரசில் பிளவுஇந்த செயல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான டி.பி.ஆர்.செல்வம் சமீப காலமாக காங்கிரஸ் அரசை பாராட்டி அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.