மயில், குரங்கு தொல்லையில் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற வேண்டும் பொதுமக்கள் மனு

திண்ணனூர் கிராமத்தில் மயில், குரங்கு தொல்லையில் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2017-06-05 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது முசிறி தாலுகா திண்ணனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

திண்ணனூர் கிராமத்தின் அருகில் புலிவலம், ஓமாந்தூர், கரட்டாம்பட்டி, நடுவலூர் வனப்பகுதிகள் உள்ளன. இங்கிருந்து மயில், குரங்குகள் அணி அணியாக வந்து விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த வறட்சியான சூழ்நிலையிலும் நாங்கள் கஷ்டப்பட்டு மோட்டார் பாசனம் மூலம் விளைவித்த நெற்கதிர்களை குரங்குகள் உருவி தின்று விடுகின்றன.

ஏராளமான மயில்களும், குரங்குகளும் படை எடுத்து வருவதால் நாங்கள் பகல் முழுவதும் வெயிலில் நின்று பயிர்களை காப்பாற்ற வேண்டியது உள்ளது. அப்படி இருந்தும் ஒரு படி நெல்லோ தானியமோ வீட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. இதுபற்றி நாங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மனு கொடுக்க வந்த போது அவர்கள் சேதம் அடைந்த பயிர்களை கையில் எடுத்து வந்திருந்தனர்.

அப்துல்கலாமுக்கு சிலை

புதிய தன்னம்பிக்கை மையத்தினர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு திருச்சியில் சிலை அமைக்க வேண்டும், தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்லூரி சாலைக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், ராமநாத புரத்தில் அப்துல் கலாம் சமாதி அமைந்து உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டுமான பணியை விரைவாக முடிக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

அனைத்து மாவட்ட காவிரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை கனிம வள மற்றும் விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில், காவிரி நீரை பெற்றுத்தர தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மணல் குவாரிகளில் தேவைக்கு தகுந்தார் போல மணல் விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதால் மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும், மணல் கொள்ளையர்களிடம் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்