அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது 9-ந் தேதி வரை நடக்கிறது

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 9-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Update: 2017-06-05 22:30 GMT
திருவண்ணாமலை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 12-ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தங்களது மேற்படிப்புகளை தொடர என்ஜினீயரிங், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர்.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 2017-18-ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதி வரை பெறப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 10 ஆயிரத்து 479 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டது. அதில் பூர்த்தி செய்யப்பட்டு 8 ஆயிரத்து 12 விண்ணப்பங்கள் மட்டுமே திரும்ப பெறப்பட்டது.

மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு

இந்த நிலையில் விண்ணப்பித்த மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. காலையில் பி.ஏ. பாடப்பிரிவுக்கும், மதியம் பி.எஸ்சி. பாடப்பிரிவுக்கும் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. மாணவர்களின் சான்றிதழ் மற்றும் மதிப்பெண்கள் பட்டியலை பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

சான்றிதழ் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடப்பிரிவில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டது. 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கூடுதலாக 20 சதவீதம் இடஒதுக்கீடு

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர 1,200 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. இந்தாண்டு கூடுதலாக 20 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று 1,492 சீட்டுகள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இளங்கலை அறிவியல் துறைக்கு 6 ஆயிரத்து 500 மாணவர்களும், இளங்கலைத்துறைக்கு 1,500 மாணவர்களும் விண்ணப்பித்து உள்ளனர்.

அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்து படிக்க ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதால் நடப்பு கல்வி ஆண்டில் மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் சின்னையா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்