கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்

கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை,வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2017-06-05 23:00 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள வால்காரமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கும், எடக்கண்டிகை கிராமத்தை சேர்ந்த வித்யா (24) என்பவருக்கும் கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அஸ்வின் (3) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த வித்யா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வித்யாவின் தாய் எல்லம்மாள், ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சாவில் சந்தேகம்

அதில், எனது மகள் வித்யாவின் திருமணத்தின்போது 10 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.50 ஆயிரம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்தேன். ஆனால் ராஜ்குமாரும், அவரது தாய் குமாரியும் எனது மகள் வித்யாவிடம் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் ஏற்கனவே கடந்த ஆண்டு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வித்யா தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரை காப்பாற்றினேன்.

இந்த நிலையில்தான் வித்யா மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தொலைபேசியில் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி (பொறுப்பு) தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்