திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-06-05 21:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 30). கூலி தொழிலாளி. கடந்த 1–ந்தேதி இவர், தனது மோட்டார் சைக்கிளில் வேப்பம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே திருவள்ளூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராமதண்டலத்தைச் சேர்ந்த அம்பேத்(27), அவருடைய நண்பர் பூபாலன்(31) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சரவணன், நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண் பலி

பள்ளிப்பட்டு தாலுகா ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், நேற்று அம்மனேரி கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு காது குத்தும் விழாவுக்கு ஆட்டோவில் சென்றனர். மீண்டும் ஊருக்கு திரும்பி வரும்போது அம்மனேரி ஏரி கரையில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவருடைய மனைவி பாப்பம்மாள் (60) என்பவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த ரோசி(55), அம்சா(65), செந்தாமரை(30), சந்துரு(11), ரவிசந்திரன்(23), சந்தோஷ்(7), லதா (17), அர்ச்சனா(16), அனிதா(15) மற்றும் ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (26) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கட்டிடத்தில் கார் மோதல்

பேரம்பாக்கம் அடுத்த சின்னமண்டலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேலு(37), மணிகண்டன்(28), கோவிந்தசாமி(38) மற்றும் மனோகரன்(33). இவர்கள் 4 பேரும் நேற்று காலை பொன்னேரியில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த நேதாஜி (33) என்பவர் ஓட்டிச்சென்றார்.

தச்சூர் கூட்டுசாலையில் திரும்பி பொன்னேரிக்கு செல்ல வேண்டிய கார், அப்பகுதியை கடந்து வழி தவறி நேரே கவரைப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், கவரைப்பேட்டையில் தனியார் கல்லூரி எதிரே உள்ள தேவாலய கட்டிடத்தில் மோதியது.

செல்லும் வழியில் சாவு

இதில் கார் டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் வேலு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற 4 பேரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் பலியான வேலு, ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் கார் உற்பத்தி தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதுபற்றி கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்