திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்

திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என ஆர்.டி.ஓ. எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2017-06-05 22:15 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில், மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர், மப்பேடு, சத்தரை, மணவாளநகர், வெங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கூவம் மற்றும் குசஸ்தலை ஆறுகளில் வருவாய்த்துறையுடன் சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டார்.

நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த கண்காணிப்பின் போது திருக்கண்டலம் பகுதியில் உள்ள குசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் எந்திரத்தையும், 3 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குண்டர் சட்டம் பாயும்

அதிகாரிகளை கண்ட உடன் அங்கிருந்த லாரி டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வெங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கூவம் மற்றும் குசஸ்தலை ஆறுகளில் இருந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ எச்சரித்து உள்ளார்.

மேலும் செய்திகள்