தொழுகை நடத்த அமைக்கப்பட்ட குடிசை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை புதுப்பேட்டையில் தொழுகை நடத்த அமைக்கப்பட்டு இருந்த குடிசை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை புதுப்பேட்டை நாராயண நாயக்கர் தெருவில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் உதுமான்லெப்பை(வயது 55). ரம்ஜான் நோன்பையொட்டி தொழுகை நடத்துவதற்காக தனது வீட்டு மாடியில் ஓலை குடிசை அமைத்து உள்ளார்.
இந்த குடிசையில் அவரது உறவினர்கள் வந்து தொழுகை நடத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அதிகாலை தொழுகை முடிந்ததும் அனைவரும் சென்று விட்டனர். அப்போது மின்விளக்கை அணைக்காமல் சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் மின்சார வயர்களில் இருந்து வந்த தீப்பொறி குடிசையில் விழுந்து குடிசை தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அசம்பாவிதம் தவிர்ப்பு
உடனே எழும்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிசையில் பிடித்த தீயை அணைத்தனர்.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தை சுற்றி இரு சக்கர, நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. தீ உடனே அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் கடந்த 31–ந்தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீ பிடித்தது. இதை தொடர்ந்து புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ பிடித்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வல்லூர் அனல் மின் நிலையத்திலும், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலிலும் தீ பிடித்தது. இந்த நிலையில் நேற்று காலை புதுப்பேட்டையில் தீ பிடித்தது.
சென்னையில் நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த தீ விபத்துகள் பொதுமக்களிடையே
ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.