சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜிடம் திருமாவளவன், ராமகிருஷ்ணன் நலம் விசாரித்தனர்

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜிடம் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Update: 2017-06-04 23:00 GMT

பூந்தமல்லி,

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டு இறைச்சி உண்ணும் விழா நடத்தியதற்காக மாணவர் சூரஜ் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மாணவர் சூரஜை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:–

சட்டரீதியான நடவடிக்கை

மாட்டு இறைச்சி உண்டார் என்பதற்காக ஒரு கும்பல் சூழ்ந்து தாக்கியதில் மாணவர் சூரஜூக்கு கண்ணை சுற்றி உள்ள முக எலும்புகள் உடைந்து உள்ளது. மாணவர்கள் இடையே வகுப்பு வாத அரசியல் திணிக்கப்பட்டு உள்ளது என்பதற்கு இது சான்றாக உள்ளது. பா.ஜனதா மக்கள் இடையே அரசியல் செய்வதை தாண்டி, கல்வி கற்கும் மாணவர்கள் இடையேயும் புகுந்து வெறுப்பு அரசியலை விதைப்பது நாட்டுக்கு தீங்கானது.

மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கைது செய்யப்படவில்லை. இதற்கு துணை நின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை இல்லாமல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா வெற்றிகரமாக நடந்து உள்ளது. அவரது 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவருக்கு ஆதரவாக, எதிராக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து பேச வைத்து இருந்தால் விரிவாக பேசி இருக்க முடியும். ஆனால் தேசிய தலைவர்களால் பேச முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.ராமகிருஷ்ணன்

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர் சூரஜை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாதிக்கப்பட்ட மாணவர் சூரஜ் மீது காவல் துறை கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. ஆனால் அவரை தாக்கிய மனிஷ் சிங் மீது குறைந்தபட்ச பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சூரஜ் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஐ.ஐ.டி. நிர்வாகம் பாரபட்சமாக உள்ளது. மாணவரை தாக்கியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. உடனடியாக சூரஜ் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதிகபட்சமாக அவரை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்