போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.21 லட்சம் அபராதம் வசூல்

திருவண்ணாமலையில் கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.20 லட்சத்து 89 ஆயிரத்து 610 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-06-04 22:15 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.20 லட்சத்து 89 ஆயிரத்து 610 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2 ஆயிரத்து 301 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகன சோதனை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்படியும், திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிப்பிரியா அறிவுரையின் பேரிலும், திருவண்ணாமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கனி தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், நாராயணன் மற்றும் போக்குவரத்து போலீசார் அவலூர்பேட்டை சாலை, மணலூர்பேட்டை சாலை, செங்கம் சாலை, போளூர் சாலை, தேரடி வீதி, மாட வீதி, பஸ்நிலையம் அருகே, கலெக்டர் அலுவலகம் அருகே உள்பட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி, கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 5 மாதங்களில் போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 10 ஆயிரத்து 150 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் (மே) மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 2 ஆயிரத்து 130 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.20¾ லட்சம் அபராதம் வசூல்

அதிகபாரம் ஏற்றி வந்த 8 வாகனங்கள் மீதும், அதிக வேகமாக சென்ற 252 வாகனங்கள் மீதும், அதிக உயரம் ஏற்றிசென்ற 31 வாகனங்கள் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி சென்ற 415 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய 2 ஆயிரத்து 301 பேர் மீதும், அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்திய 243 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 254 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிய 622 பேர் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்ற 160 பேர் மீது என போக்குவரத்து விதிகளை மீறிய 10 ஆயிரத்து 150 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.20 லட்சத்து 89 ஆயிரத்து 610 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் (மே) மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்