மனைவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி பக்கத்து வீட்டினர் ஓடி வந்ததால் பயத்தில் வாலிபர் தற்கொலை

மனைவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த வாலிபர் பக்கத்து வீட்டினர் ஓடி வந்ததால் பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-06-04 23:00 GMT

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி ஆர்.எம்.ஐ. நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் வினோத் (வயது 29). வெளிநாட்டில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (27). இந்த தம்பதிக்கு விஜயலட்சுமி (9), களிஷ்கா (2) என 2 மகள்கள் உள்ளனர். வினோத் வெளிநாட்டில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 9 மணியளவில் வீட்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசம் அடைந்த வினோத் திடீரென வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளா அலறியபடியே கணவரை தள்ளிவிட்டு வெளியே தப்பி ஓடி வந்தார்.

தற்கொலை

இதை பார்த்த அவரது மகள்களும் பயத்தில் அலறி உள்ளனர். இவர்களது வீட்டின் அருகில் உள்ளவர்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தனர். அப்போது மஞ்சுளா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் உடனடியாக மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

அதே நேரத்தில் வீட்டில் இருந்த வினோத் பயத்தில் தனது மனைவியின் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்டு, இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்–இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார்,சுரேஷ்பாபு உட்பட போலீசார் விரைந்து வினோத்தின் உடலை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கல்பாக்கம் போலீசார் என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்