தவறான பிரசாரங்களை நம்ப வேண்டாம்: அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்

தவறான பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும், அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

Update: 2017-06-04 23:00 GMT
கரூர்,

கரூர் பசுபதிபாளையத்தில் செல்வம் நகரில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். கீதா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 121 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினர்.

ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்

விழாவில் தம்பிதுரை பேசுகையில், “இந்த ஆட்சி நிலையான ஆட்சி. மறைந்த ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு வரும் ஆட்சி. இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்.

சில தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். சிலர் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நிலைக்கும்” என்றார்.

இணைத்து செயல்படுவோம்

விழா முடிந்ததும் தம்பிதுரையிடம், அ.தி.மு.க. அம்மா அணி டி.டி.வி. தினகரன் தலைமையில் வழி நடத்தப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், “அ.தி.மு.க. பிளவுபடாத இயக்கம். மறைந்த ஜெயலலிதாவின் நல் ஆசியுடன் அமைந்துள்ள இந்த அரசு, நாட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடு இருப்பது வழக்கம். பிளவு படாத அ.தி.மு.க.வில் சிலர் சில கருத்துக்களை கூறி வருகின்றனர். கருத்து வேறுபாடுகளை களைந்து நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். நாங்கள் எல்லாம் நண்பர்கள்” என்றார்.

பதில் அளிக்கவில்லை

தொடர்ந்து டி.டி.வி. தினகரன் கட்சியில் துணை பொதுசெயலாளராக நீடிக்கிறாரா? இல்லையா? என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட தொடங்கினார். டி.டி.வி. தினகரனை சந்தித்து பேச வாய்ப்பு உண்டா? என கேள்வி எழுப்பிய போது அதற்கும் அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விழாவில் உதவி கலெக்டர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்