பூனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நெய்வேலி பூனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-06-04 22:30 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவிற்கு உட்பட்ட நெய்வேலி கிராமத்தில் பூனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தன. நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி காலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 3-ந் தேதி வரை வாஸ்து ஹோமம், அங்குரார்பணம், கும்பஅலங்காரம், மகா கணபதி, பூர்ணாஹுதி, நட்சத்திர ஹோமம், 108 மூலிகை உள்ளிட்ட 3 கால பூஜைகள் நடைபெற்றன.

நேற்று காலை 6 மணிக்கு மேல் கணபதி பூஜை, நாடி சந்தனம், கோ பூஜை, மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கருட பகவான் வானில் வட்டமிட, மங்கள இசை ஒலிக்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் பூனாட்சி

இதனைத்தொடர்ந்து காலை 10.40 மணிக்கு மூலஸ்தான தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கோவில் திருப்பணி குழு தலைவருமான டி.பி. பூனாட்சி மற்றும் சித்தாம்பூர், கோமங்கலம், வடக்கிப்பட்டி, பூசாரிப்பட்டி, வீரமணிப்பட்டி, கொடுந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பூனாட்சி அம்மனை வழிபட்டனர்.

அன்னதானம்

கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணி குழுவினர், இளைஞர் மன்றங்களை சேர்ந்தவர்கள் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவின் தலைவரும், செயலாளருமான சேவுகமூர்த்தி, பொருளாளர் குழந்தை ஆகியோர் உள்பட கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்