நள்ளிரவில் தீவிபத்து: 5 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

நாகையில் நள்ளிரவில் 5 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன.இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

Update: 2017-06-04 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 62). இவர் இரவுநேர டிபன் கடை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த தீ அருகில் இருந்த காசிமாயன்(53), சுந்தர் (40), செல்லப்பாண்டி(36), பன்னீர் செல்வம்(40) ஆகிய 4 பேரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 5 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தன. இந்த தீவிபத்தில் 5 வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

உதவி தொகை

தகவல் அறிந்து நாகை உதவி கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் உதவி தொகை ரூ.5 ஆயிரமும், 5 கிலோ அரிசி மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றை வழங்கினர்.

மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயபால் அங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார். இந்த தீவிபத்து குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்