கடந்த 7 ஆண்டுகளில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

கடந்த 7 ஆண்டுகளில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆந்திர மாநில சிறப்பு தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் கூறினார்.

Update: 2017-06-04 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலகுறி கிராமத்தில் செம்மரம் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர மாநிலத்தின் செம்மரம் கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் பொதுமக்களிடம் செம்மரம் கடத்த செல்வதால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்படுவது குறித்து விளக்கி கூறினார்

அப்போது அவர் பேசியதாவது:-

ஆந்திராவில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்த வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மலை கிராமத்தில் உள்ள சிலர் வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த மலைகிராமத்தில் உள்ள சிலர் பணத்திற்கு ஆசைபட்டு செம்மரம் கடத்துகிறார்கள்.

31 பேர் கொலை

மேலும் செம்மரம் கடத்த வருபவர்கள் உணவுகள் எடுத்துக்கொண்டு வந்து வனப்பகுதியில் தங்கி செம்மரம் வெட்டுகிறார்கள். அவ்வாறு செம்மரம் வெட்டி கடத்தும் போது பிடிபடுபவர்கள் ஆறு மாதம் சிறைக்கு செல்கிறார்கள். அவர்கள் தங்களது உண்மையான முகவரியை தெரிவிக்காததால் அவர்களது குடும்பத்தினரும் இவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

மேலும் கடந்த 7 ஆண்டுகளில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 31 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 29 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் யார் என்றே இதுவரை தெரியவில்லை. தமிழக அரசு உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருகிறது. பிறகு ஏன் செம்மரம் கடத்த வேண்டும். உங்கள் குடும்பத்தில் யாரையும் செம்மரம் கடத்த அனுமதிக்க கூடாது.

கடத்த கூடாது

நாம் அனைவரும் இந்தியர்கள். செம்மரம் நமது சொத்து. அதை சீனாவிற்கு கடத்த துணை போக கூடாது. சீனாவில் இந்த செம்மரத்தால் ஆன கட்டில் 2 கோடி வரை விலை போகிறது. அதை 200 பேர் தயார் செய்கிறார்கள். எனவே செம்மரத்தை யாரும் கடத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், அந்த மாநில வன பாதுகாவலர் விஸ்வமூர்த்தி, போலீசார் திருமால், கதிர், கிருஷ்ணகிரி தாலுகா தனிப்பிரிவு ஏட்டு உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்