பணமில்லா பரிவர்த்தனைக்கு வணிகர்கள் தயாராக வேண்டும்

பணமில்லா பரிவர்த்தனைக்கு வணிகர்கள் தயாராக வேண்டும் வருமான வரித்துறை இணை இயக்குனர் பேச்சு

Update: 2017-06-04 22:30 GMT

மதுரை,

பணமில்லா பரிவர்த்தனைக்கு வணிகர்கள் தயாராக வேண்டும் என்று வருமான வரித்துறை இணை இயக்குனர் கூறியுள்ளார்.

பணமில்லா பரிவர்த்தனை

பணப்பரிவர்த்தனை குறித்த விளக்கக் கூட்டம் மதுரை தொழில் வர்த்தக சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு முன்னிலை வகித்தார். இதில் வருமான வரித்துறை இணை இயக்குனர் நடராஜா பேசியதாவது:– வணிகர்கள் இனிவரும் காலங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு முழுமையாக தயாராக வேண்டும். இதனால் வரிஏய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்தியாவில் உள்ள 134 கோடி மக்கள் தொகையில் வெறும் 5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். பெரும்பாலானோர் வரி செலுத்தாமல் உள்ளனர். எனவே அவர்களை வரி செலுத்த வைக்கும் பணியில் வருமான வரித்துறை ஈடுபட்டுஉள்ளது.

சிறை தண்டனை

பெரு வணிகர்களில் சிலர் மட்டுமே முறையாக வரி செலுத்துகின்றனர். அனைத்து வர்த்தகர்களும் முறையாக வரி செலுத்தும் வகையில் கடுமையான சட்டத்திருத்தங்களை உருவாக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் வரி வசூலானது ரூ.8.4 லட்சம் கோடி. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ளவர்கள் ரூ.60 ஆயிரம் கோடி வரி செலுத்தி உள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் நியாயமான, குறைவான வரியை செலுத்துகின்றனர். மேலும் நூதன முறையில் வரி ஏய்ப்பு செய்பவர்களை மத்திய அரசின் வருமான புலனாய்வுத்துறை கண்காணித்து வருகிறது. இதன்மூலம் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் வணிகர்கள், அபராதம் மற்றும் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

பான் கார்டு

வருமான வரி சட்டம் 285பிஏ–யின் படி 2016 ஏப்ரல் 1–ந்தேதி முதல் வணிகர்கள் ரூ.2 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்தால் பான் கார்டு எண்ணை வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயம் பெறவேண்டும். ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்வோர் பணபரிவர்த்தனை விண்ணப்பம் 61ஏ–ஐ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 30–ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யாதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் வர்த்தக சங்க செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ஜீயர்பாபு, வருமான வரித்துறை அலுவலர் ராமகிருஷ்ணன், வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்