இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடந்தது
விழுப்புரம்,
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்மிருகவதையை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், ஒட்டகம், எருமைகள் ஆகியவற்றை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹூம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் முகம்மதுஅலி முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் ஹாருன்ரசீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
உணவு உரிமைஆர்ப்பாட்டத்தில் இறைச்சிக்காக மாடு, ஓட்டகம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதித்து மக்களின் உணவு உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக கூறி அதனை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் குடந்தை அரசன், முன்னாள் எம்.எல்.ஏ, அப்துல்நாசர், திருமார்பன், மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.