ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி கடத்தல்திருவண்ணாமலை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் கடந்த மாதம் 23–ந் தேதி திருவண்ணாமலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை– செங்கம் சாலையில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகேயுள்ள முட்புதர் பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருவண்ணாமலையை அடுத்த காவேரியாம்பூண்டி கிராமம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 24) என்பதும், கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை சாக்குமூட்டையில் கடத்த முட்புதரில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். அவரிடமிருந்து 22 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2014–ம் ஆண்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றபோது போலீசார் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் கைதுதொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் சதீஷ்குமார் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ்குமாரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை போலீஸ் அதிகாரிகள் வழங்கினர்.