திருவண்ணாமலையில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் நடந்த அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2017-06-04 00:04 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நடந்த அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2017–18–ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நேற்று நடந்தது.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்துக்குதிருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் பெரியார்சிலை, அண்ணாசிலை, காந்திசிலை, சின்னகடை வீதி வழியாக பஸ்நிலையம் அருகேயுள்ள நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு அரசு வழங்கும் 14 வகையான விலையில்லா பொருட்கள், அரசுப்பள்ளிகளில் அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள், அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் 3 வண்ண சீருடைகள் மற்றும் அரசு பள்ளிகளில் செய்யப்பட்டு பல்வேறு சிறப்புகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஊர்வலத்தில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் ரவி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் குணசேகரன், ‌ஷகிலா, சிராஜ், அன்பழகன், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்