மேச்சேரி அருகே மதுபோதையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை பெண்கள் போராட்டம்

மேச்சேரி அருகே மதுபோதையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து, மதுக்கடைக்குள் புகுந்து பாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-06-03 23:35 GMT

மேச்சேரி,

மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி ஆரியக்கவுண்டனூர் காட்டுவளவு கிராம பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அரசு மதுபானக்கடை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடை அமைந்துள்ள இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் 7 வயது சிறுமியை நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தனியாக வைத்து விட்டு, தாயார் குடிநீர் பிடிப்பதற்கு பொது குழாய்க்கு சென்று விட்டார்.

அப்போது சூரியனூர் பகுதியை சேர்ந்த 45 வயது நெசவுதொழிலாளி குடிபோதையில் தீப்பெட்டி கேட்பது போல் கேட்டு 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே தொழிலாளி தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் நேற்று மேச்சேரி போலீசில் புகார் செய்தனர்.

மதுபாட்டில்கள் உடைப்பு

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை அரசு மதுபான கடைக்கு உள்ளே புகுந்து 30–க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எடுத்து வந்து சாலையில் போட்டு உடைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தினகரன் (மேட்டூர்), சந்திரசேகரன்(ஓமலூர்) மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், இப்பகுதியில் உள்ள மதுக்கடையை உடனே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என போலீசாரிடம் கூறினர். போலீசார் போதிய காலஅவகாசம் கேட்டு கொண்டதன்பேரில், பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்