வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்

வாழப்பாடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.

Update: 2017-06-03 23:26 GMT

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தில் மதுரைவீரன் கோவில் பண்டிகையையொட்டி கடந்த மாத இறுதியில் ஜல்லிக்கட்டு நடத்த கிராமமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜல்லிக்கட்டை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தினர்.

அதன்படி, சிங்கிபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்குள்ள தம்மம்பட்டி சாலையோரத்தில் இருக்கும் திறந்தவெளி மைதானத்தில் வாடிவாசல் மற்றும் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

15 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். அவர்களிடம் பிடிபடாமல் காளைகளும் சீறிப்பாய்ந்து ஓடின. முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் சார்பில் தங்கநாணயம், பாத்திரங்கள், சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலர் மேல்சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டையொட்டி வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

மேலும் செய்திகள்