ரெயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாட்டம்

சேலத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி ரெயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.கவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2017-06-03 23:17 GMT

சூரமங்கலம்,

தமிழக முன்னாள் முதல்–அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி கட்சி கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தி.மு.க.வினர் கொண்டாடினர்.

அதன்படி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் சேலம் ஜங்‌ஷன் ரெயில் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், ரெயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தி.மு.க. நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ரெயின்போ நடராஜன், சூரமங்கலம் பகுதி செயலாளர் தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். வக்கீல் அண்ணாமலை, ஆதிதிராவிட நலக்குழு மாநகர துணை அமைப்பாளர் ஜங்‌ஷன் சரவணன், மாநகர பிரதிநிதி அரிச்சந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இளந்திரையன், மல்லமூப்பம்பட்டி ஊராட்சி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகளுக்கும், அவ்வழியாக வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளுக்கும் லட்டு, சாக்லெட் போன்ற இனிப்புகளை தி.மு.க.வினர் வழங்கினர்.

அனைத்து வார்டுகளிலும்

இதேபோல், சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு தி.மு.க.வினர் இனிப்புகளை வழங்கியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும், சேலம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, அய்யம்பெருமாம்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு இடங்களிலும் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்