மாணவர்கள் நலனே எனக்கு முக்கியம்: யாருடனும் போட்டி போட விரும்பவில்லை
மாணவர்கள் நலனே எனக்கு முக்கியம்: யாருடனும் போட்டி போட விரும்பவில்லை நாராயணசாமி புகாருக்கு கிரண்பெடி பதிலடி
புதுச்சேரி,
மருத்துவ கலந்தாய்வு குறித்து புகார் வந்ததால் தலையிட்டேன். எனக்கு மாணவர்களின் நலனே முக்கியம். யாருடனும் நான் போட்டி போட விரும்பவில்லை என்று நாராயணசாமி தெரிவித்த புகாருக்கு பதிலடியாக கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்தார்.
நாராயணசாமி குற்றச்சாட்டுபுதுச்சேரியில் மருத்துவ கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடந்து இருப்பதாக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் கவர்னர் கிரண்பெடி தலையிட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து முதல்–மந்திரி நாராயணசாமி சட்டசபையில் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கவர்னர் கிரண்பெடி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஊழல்பேர்வழிகள் என்று அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விமர்சித்து எல்லை மீறி செயல்படுகிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து கிரண்பெடி கூறியதாவது:–
விதிகளை பின்பற்றினேன்முதுகலை மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் இருந்து கவர்னர் மாளிகைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதில் கட்டணம் தொடர்பான புகார்கள் தான் அதிகம் இருந்தன. இதன்பிறகே நான் கலந்தாய்வை மேற்கொள்ளும் சென்டாக் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினேன்.
இந்த விஷயத்தில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய அரசின் விதிகளையே செயல்படுத்தினேன்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்கவேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. அந்த இடங்களை பெற்று சென்ற மாணவர்களிடம் கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணங்களை ஏற்க தனியார் மருத்துவ கல்லூரிகள் மறுத்தன. அவர்களிடம் ரூ.38 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை கட்டணங்களை செலுத்துமாறு கேட்டனர்.
அரசு இடஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்களை சேர்க்க அவர்கள் மறுத்தனர். இதனால் அரசு வழங்கிய தடையில்லா சான்றிதழை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அரசு நோட்டீசு அனுப்பி உள்ளது.
போட்டிபோட விரும்பவில்லைசென்டாக் அமைப்பானது வெளிப்படையாக மாணவர்களின் நண்பனாக இருக்கவேண்டும். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பின்னால் அரசும், கவர்னர் மாளிகையும் உள்ளது.
புதுவை அரசுக்கான இடஒதுக்கீடு நிரம்பாவிட்டால் அது அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத்தான் செல்லவேண்டும். அதற்கு நான் நடவடிக்கை எடுத்தேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, சவால்விடவோ விரும்பவில்லை. நமது மாநில மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அவர்களது நலனே எனக்கு முக்கியம். மாணவர்களின் கருத்துகளை கேட்டு அது பற்றிய விவரங்களை அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், சுகாதாரத்துறைக்கும் அனுப்ப உள்ளேன்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.