மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-06-03 23:05 GMT

புதுச்சேரி

இறைச்சிக்காக மாடுகள், எருமைகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் விற்கக்கூடாது என மத்திய பாரதீய ஜனதா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்தார்கள், உலமாக்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் புதுவை சுதேசி மில் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌ஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி உலமாக்கள் சபை, சுல்தான்பேட்டை வட்டார உலமாக்கள் சபை, புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ. கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்து உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்