கடலில் கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு: பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், இதுமட்டுமின்றி கழிவுநீருடன் பிளாஸ்டிக் பைகள், டீக்கப்புகள் ஆகியவையும் அடித்து வரப்பட்டு தேங்காய்திட்டு பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

Update: 2017-06-03 23:03 GMT

புதுவை கடலில் பல இடங்களில் கழிவுநீர் நேரடியாக கடலுக்குள் விடப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேங்காய்திட்டு துறைமுகம், முதலியார்பேட்டை, அப்துல்கலாம் நகர் உள்ளிட்ட முகத்துவார பகுதியில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதனால் கடல்நீர் மாசு ஏற்பட்டு கடல் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

இதுமட்டுமின்றி கழிவுநீருடன் பிளாஸ்டிக் பைகள், டீக்கப்புகள் ஆகியவையும் அடித்து வரப்பட்டு தேங்காய்திட்டு பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மீன்பிடி துறைமுகம், புதிய துறைமுகம் வரை இவை கிடப்பதால் தூர்வாரும் பணியில் கூட பாதிப்பு ஏற்பட்டது.

இந்த கழிவுகளால் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் கேந்திரமாக காட்சி அளிக்கிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பக்கூடியதாகவும் இருந்து வருகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை பரப்பி வருகின்றன.

கடலின் முகத்துவாரத்தை அடைத்துக் கொண்டு கழிவுகள் தேங்கி கிடப்பதால் கடல்நீர் மாசுபடுவதுடன் கடல் வளம் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. இது மட்டுமின்றி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இந்த பகுதியில் வளர்க்கப்படும் சதுப்புநில தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன.

விழிப்புணர்வு தேவை

எனவே கழிவுநீரை நேரடியாக கடலுக்குள் விடுவதை அரசு தடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை தனியாக கால்வாய் அமைத்து கடலுக்குள் விடுவதால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

கடல் பகுதியில் இதுபோல் கழிவுநீர் விடப்படுவதால் எதிர்கால சந்ததியருக்கு ஏற்படும் பாதிப்புகள், நோய் பரவும் விதங்கள் குறித்து பொதுமக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் கழிவுநீர், குப்பைகள் இந்த பகுதியில் சேராமல் இருப்பதற்கான தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற கெடுபிடிகளை செய்வதன் மூலம் கடல் மாசுபடுவதை தடுப்பதுடன் துறைமுகம் தூர்வாரும் பணியையும் சிக்கல் இன்றி மேற்கொள்வதுடன் சுகாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்பதை பொதுமக்களுக்கு அரசு உணர்த்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்