பெங்களூருவில் 5 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம்

பெங்களூருவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயது சிறுமி கைவிரல் துண்டிக்கப்பட்டு, தலையில் பலத்த காயங்களுடன் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தாள்.

Update: 2017-06-03 22:58 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயது சிறுமி கைவிரல் துண்டிக்கப்பட்டு, தலையில் பலத்த காயங்களுடன் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தாள். அவளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை பலாத்காரம் செய்ததாக பிச்சைக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

சிறுமி பாலியல் பலாத்காரம்

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையோரம் 5 வயது மதிக்கத்தக்க சிறுமி, தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தாள். இதுபற்றி நேற்று அதிகாலை 2 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார் காயங்களுடன் மயங்கி கிடந்த சிறுமியை மீட்டு பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிறுமியை அனுமதித்து அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதற்கட்டமாக சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதும், அவளுடைய கைவிரல் ஒன்று துண்டிக்கப்பட்டு இருப்பதும், தலை, பிறப்பு உறுப்பு உள்பட உடலின் பிற பகுதிகளில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.

கடத்தினர்


இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது, சிறுமியின் பெற்றோர் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணியில் கூலி தொழிலாளிகளாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், மயங்கிய நிலையில் சிறுமி மீட்கப்பட்ட இடத்தின் சிறிது தொலைவிலேயே அவர்கள் கூடாரம் அமைத்து தங்கி இருப்பதும், காலை நேரத்தில் தங்களின் மகளை காணவில்லை என அவர்கள் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, போலீசார் சிறுமியின் பெற்றோரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அப்போது, அதிகாலை 2 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க கூடாரத்தை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததும், இந்த வேளையில், சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்த புகாரின் பேரில் கே.ஜி.ஹள்ளி போலீசார் ‘போக்சோ‘ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பற்றி விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுப்பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடிவந்தனர்.

இதற்கிடையே, பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், பெங்களூரு கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர், கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அஜய்ஹிலோரி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை பார்த்தனர். மேலும் சிறுமியின் உடல்நலம் பற்றி அவர்கள் டாக்டரிடம் விசாரித்தனர்.

பரபரப்பு


இதுகுறித்து பவுரிங் ஆஸ்பத்திரி டாக்டர் மஞ்சுநாத் கூறுகையில், ‘தலை, பிறப்பு உறுப்பு மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்களுடன் 5 வயது சிறுமி அதிகாலை 3.45 மணிக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். கையின் மோதிர விரல் துண்டிக்கப்பட்டுள்ளது. காயங்களை பார்க்கும்போது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு இருப்பது தெரிகிறது. சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் சிறுமி மீளவில்லை. மயக்க நிலையிலேயே இருக்கிறாள். சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை‘ என்றார்.

5 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

பிச்சைக்கார வாலிபர் கைது

இந்த நிலையில், கே.ஜி.ஹள்ளியில் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றிய பிச்சைக்காரரான வீரேசா (வயது 24) என்பவரை நேற்று மாலையில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதைதொடர்ந்து வீரேசாவை போலீசார் கைது செய்தனர்.

கைதான வீரேசா பெங்களூரு வீரண்ண பாளையாவில் வசித்து வருவதும், அவர் சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூர் தாலுகா கொண்டலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சம்பவம் நடந்த 12 மணிநேரத்தில் வீரேசாவை கைது செய்த போலீசாரை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் பாராட்டினார். மேலும், வீரேசாவை கைது செய்த போலீசாருக்கு சன்மானம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்