நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகை

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.

Update: 2017-06-03 22:32 GMT

நெல்லை,

ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் அந்த கட்சியினர் மற்றும் புளியங்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்த பொது மக்கள் நேற்று நெல்லையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

கேலி செய்தனர்

புளியங்குடி அருந்ததியர் தெருவில் 70 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 1–ந் தேதி எங்கள் பகுதியில் கோவில் கொடை விழா முடிந்து இரவில் அருகில் உள்ள புதுமனை தெருவுக்கு நடந்து சென்ற ஒரு பெண்ணை, மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் வழிமறித்து கேலி செய்து உள்ளனர். மேலும் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சி செய்து உள்ளனர். இதைக்கண்ட எங்கள் தெருவை சேர்ந்த இளைஞர் சக்திவேல் என்ற ராஜேஷ் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ராஜேஷை அடித்து, உதைத்தனர். இதுகுறித்து நாங்கள் புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. மேலும் எதிர்தரப்பினர் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டுகின்றனர். எனவே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதோடு, எங்கள் பகுதி மக்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்