குற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது. அங்குள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2017-06-03 22:28 GMT

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நேற்று சீசன் தொடங்கியது. காலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. மதியத்திற்கு மேல் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மலை பகுதியிலும் மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் ஆக்ரோ‌ஷமாக தண்ணீர் கொட்டியது.

இதில் குளிப்பது ஆபத்து என்பதால் போலீசார் குளிப்பதற்கு தடை விதித்தனர். சிறிது நேரத்தில் மெயின் அருவியிலும் தண்ணீர் தடுப்பை தாண்டி விழுந்தது. இதனால் அங்கும் குளிக்க தடை விதித்தனர். நேற்று காலை வரை இந்த தடை நீடித்தது. காலை 4 மணிக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனையடுத்து தற்போதைய சூழலில் சீசன் களை கட்டி வருகிறது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

நேற்று காலையில் இருந்தே சாரல் மழை பன்னீர் தெளித்தாற்போல் தூறியது. இதமான வெயிலும் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. இந்த தகவல் அறிந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரத் தொடங்கினர். மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுந்தது. இதனால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.

ஐந்தருவி அருகே உள்ள படகு குழாமிற்கு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. தண்ணீர் நிறைந்ததும் படகு சவாரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடத்தப்படும். சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி விட்டதால் அரசு டவுன் பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்