பர்கூர் வனப்பகுதிக்கு மாடுகள் மேய்க்க சென்றபோது யானை மிதித்து தொழிலாளி சாவு

பர்கூர் வனப்பகுதிக்கு மாடுகள் மேய்க்க சென்றபோது யானை மிதித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-06-03 22:02 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக்கிராமம் பெஜிலட்டியை சேர்ந்தவர் கெம்பான் (வயது 60). இவர் 10 மாடுகளை வளர்த்து வந்தார். பெஜிலட்டி பகுதியில் மாடுகளுக்கு சரியான தீவனம் இல்லை. இதனால் கெம்பான் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் தண்டா என்ற மலைக்கிராமத்துக்கு சென்று தங்கி கடந்த 1 மாதமாக பர்கூர் வனப்பகுதியில் மாடுகளை மேய்த்து வந்தார்கள்.

அதேபோல் நேற்று முன்தினம் காலை கெம்பான் உள்பட 4 பேரும் மாடுகளை வனப்பகுதியில் உள்ள ஓதிமடுவு என்ற இடத்துக்கு ஓட்டி சென்றார்கள். மாலை 6 மணி அளவில் மற்ற 3 பேரும் மாடுகளை மேய்த்துவிட்டு தண்டா மலைக்கிராமத்துக்கு திரும்பிவிட்டனர். ஆனால் கெம்பானின் மாடுகள் மட்டும் திரும்பி வந்தன. கெம்பானை காணவில்லை.

யானை மிதித்து சாவு

இதனால் 3 பேரும் அவரை தேடிப்பார்த்தார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து நேற்று மதியம் 2 மணி அளவில் அவர்கள் வனப்பகுதிக்கு சென்று கெம்பானை தேடினார்கள். அப்போது அவர் அங்கே யானை மிதித்து இறந்து கிடந்தார். அவரது உடலை சுற்றி 7 யானைகள் யாரையும் அருகில் நெருங்க விடாமல் நின்று கொண்டு இருந்தன. இதனால் வனத்துறையினர் பட்டாசு வெடித்து அந்த யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சுமார் 2½ மணிநேர போராட்டத்துக்கு பிறகு மாலை 4.30 மணி அளவில் யானைகள் அங்கிருந்து சென்றன.

அதன்பின்னர் வனத்துறையினர் கெம்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த கெம்பானுக்கு மாதி (55) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கெம்பானின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்