தாய்ப்பால் குடித்த சற்று நேரத்தில் உயிரிழப்பு: இரட்டை பெண் குழந்தைகள் சாவில் மர்மம் நீடிக்கிறது

தாய்ப்பால் குடித்த சற்று நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த இரட்டை பெண் குழந்தைகள் சாவில் மர்மம் நீடிக்கிறது. குழந்தைகளின் உடல்கள் வீட்டு வளாகத்தில் புகைப்பட்டு இருப்பதால், அந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2017-06-03 23:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள காற்றாடித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 39), தொழிலாளி. அவருக்கு திவ்யா (29) என்ற மனைவியும், அனுஷ்கா (2) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் திவ்யா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 22-ந் தேதி நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்து, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆஸ்பத்திரியில் இருந்து இரட்டைக் குழந்தைகளுடன் வீடு திரும்பிய திவ்யா, கண்ணக்குளத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

அடுத்தடுத்து உயிரிழப்பு

நேற்று முன்தினம் அதிகாலையில் குழந்தைகளுக்கு அவர் தாய்ப்பால் ஊட்டினார். ஆனால், அதன்பின்பு 2 பச்சிளம் குழந்தைகளும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தன.

பிறந்த சில நாட்களில் ஒரே நேரத்தில் இரட்டை பச்சிளம் பெண் குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய்ப்பால் குடித்த போது, புரையேறி மூச்சுத்திணறி 2 குழந்தைகளும் இறந்திருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினரால் பேசப்படுகிறது.

உயிரிழந்த இரட்டை பெண் குழந்தைகளின் உடல்கள், காற்றாடித்தட்டில் உள்ள திவ்யாவின் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அந்த வீட்டின் வளாகத்திலேயே பள்ளம் தோண்டி குழந்தைகளின் உடல்களை திவ்யாவின் குடும்பத்தினர் புதைத்துவிட்டனர்.

மர்மம் நீடிக்கிறது

தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய 2 பச்சிளம் குழந்தைகளும் ஒரே சமயத்தில் இறந்தது எப்படி? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்று திவ்யாவிடமும், அவருடைய குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக கோட்டார் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து திவ்யாவிடமும், அவருடைய கணவர் கண்ணன், தாயாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தைகளின் சாவில் மர்மம் நீடிப்பதால், புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசாரும், அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கும் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இன்று பிரேத பரிசோதனை?

நேற்று காலையிலேயே உடல்களை தோண்டி எடுக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர். உடல்களை அங்கேயே பிரேத பரிசோதனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டு தாசில்தாரிடம் ஒப்புதலும் பெறப்பட்டு இருந்தது. ஆனால் பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவினரின் வருகைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக குழந்தைகளின் உடல்களை எடுக்க நேற்று தோண்டும் பணி நடைபெறவில்லை. இன்றோ (ஞாயிற்றுக் கிழமை) அல்லது நாளையோ குழந்தைகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “தாய்ப்பால் குடித்த போது பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அதன்காரணமாக இரட்டை பச்சிளம் பெண் குழந்தைகளும் தாய்ப்பால் குடித்ததால் ஒரே நேரத்தில் மூச்சுத்திணறி இறந்துவிட்டன என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய இருக்கிறோம். பரிசோதனை முடிவு வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

மேலும் செய்திகள்