பன்றி கறியை கி.வீரமணிக்கு பார்சலில் அனுப்பும் போராட்டம் இந்து முன்னணியினர் நடத்தினர்

பசுவதை தடுப்பு சட்டம் வேண்டுமென்று பன்றி கறியை கி.வீரமணிக்கு பார்சலில் அனுப்பும் போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர்.

Update: 2017-06-03 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

மத்திய அரசு பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாடுகளை நடு ரோட்டில் வெட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பன்றி கறி பார்சல்

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இந்து முன்னணியினர் பசுவதை தடுப்பு சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜெயங்கொண்டம் நகர தலைவர் ரமேஷ் தலைமையில் தபால் நிலையம் மூலம் தி.க. தலைவர் கி.வீரமணிக்கு பன்றி கறியை பார்சல் அனுப்ப ஜெயங்கொண்டம் நான்கு ரோடு தபால் நிலையத்திற்கு முன்பு திரண்டனர். பின்னர் அங்கு பன்றி கறியை பார்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் ராஜா, செந்துறை ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு பன்றி கறியை பார்சல் அனுப்பும் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்