டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 4 வது நாளாக முற்றுகை போராட்டம்
குடியிருப்புக்கு மத்தியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ஆவரம்பட்டியில் குடியிருப்புக்கு மத்தியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொது மக்களை திரட்டி ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று 4– வது நாளாக போராட்டம் நடந்தது. நேற்று பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு கண்ணீர் அஞ்சலி பதாகை வைத்தும் உருவ பொம்மையை நாற்காலியில் அமர வைத்த நிலையில், அதற்கும் கண்ணீர் அஞ்சலி பதாகைகளை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடையை குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத வரையில் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.