மதுக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

ராமநாதபுரம் அருகே கிராம பகுதிகளில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரளாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2017-06-03 22:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை ஊராட்சி கீரிப்பூர் வலசை கிராம பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வாலாந்தரவை பஸ் நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே, அந்த இடத்தில் இருந்த மதுக்கடை பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் அகற்றப்பட்டது. அன்று முதல் இந்த பகுதியில் பிரச்சினை ஏதுமின்றி அமைதியாக இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் மதுக்கடை அமைக்க உள்ளது எங்களின் பாதுகாப்பிற்கும், அந்த பகுதி அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே உடனடியாக அந்த பகுதியில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

உறுதி

இதேபோல, ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட சுப்பையா நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் 1,500 பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு செல்லும் வழியில் தற்போது மதுக்கடை அமைப்பதற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பள்ளி மாணவிகள், பெண்களுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ள இந்த மதுக்கடையை உடனடியாக தடுத்து நிறுத்தி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்