பெண்ணிடம் கைவரிசையை காட்ட முயன்றபோது சிக்கினார் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய வாலிபர், மற்றொரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றபோது பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2017-06-03 22:00 GMT

திருச்சி,

பெரம்பலூர் மாவட்டம் எசனை பகுதியை சேர்ந்தவர் கல்யாணி(வயது 65). இவர் திருச்சி கேகே.நகர் கிருஷ்ணமூர்த்திநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக அவர் நேற்று மாலை உறவினர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது தலையில் ஹெல்மெட் அணிந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், மோட்டார் சைக்கிளில் கல்யாணியை பின்தொடர்ந்து வந்தார். திடீரென அந்த வாலிபர், கல்யாணி கழுத்தில் கிடந்த 4¾ பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாணி சத்தம் போட்டார். ஆனால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றார். இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியினர் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வாலிபர் சிக்கினார்

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாலிபர் டேவிட் காலனி வழியாக சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த உஷா என்ற பெண் தன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை, அந்த வாலிபர் பறிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்து கொண்ட உஷா, தங்க சங்கிலியை தன் கைகளில் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். அப்போது வீட்டிற்குள் இருந்த உறவினர்கள் வெளியில் ஓடி வந்தனர்.

இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். ஆனால் அந்த பகுதி மக்கள், அந்த வாலிபரை துரத்தி சென்றனர். இதனால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி சென்று, அந்த பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து கே.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரித்த போது சரியான பதில் கூறவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்