தலைவாசல் அருகே மதுக்கடையை திறக்கவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

தலைவாசல் அருகே மதுக்கடையை திறக்க விடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-02 23:37 GMT

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அண்ணாசிலை அருகில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடை அருகில் கோவில், அரசு மேல்நிலைப்பள்ளி, பஸ் நிறுத்தம், குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவிகளை குடிமகன்கள்கேலி, கிண்டல் செய்தனர். இதனால் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று காட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை சார்பில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

மேலும் கடந்த 9–10–2013 அன்று நடந்த போராட்டத்தின்போது இந்த மதுக்கடை 3 மாதங்களில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் மதுக்கடை அகற்றப்படவில்லை.

முற்றுகை

எனவே மதுக்கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மதியம் 12 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் மட்டுமின்றி மாணவ–மாணவிகளும் கலந்து கொண்டனர். அப்போது கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், தாசில்தார் முருகையன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மதுக்கடையை இடமாற்றம் செய்தால் தான் இங்கிருந்து செல்வோம், என போராட்டக்காரர்கள் உறுதியுடன் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து, இன்னும் ஒரு வாரத்தில் மதுக்கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்