மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

எருமப்பட்டி அருகே மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2017-06-02 23:28 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே உள்ள போடி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 20), கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படித்த 17 வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, திருச்செந்தூர் அழைத்துச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு மாணவியை நாமக்கல்லுக்கு அழைத்து வந்த பிரபாகரன் போடிநாயக்கன்பட்டியில் விட்டு விட்டு சென்றுவிட்டார். இது குறித்து மாணவி நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறைத்தண்டனை

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனுக்கு மாணவியை கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரபாகரன் தண்டனை காலம் அதிகமாக உள்ள 10 ஆண்டு கால தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்