விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தர்மபுரி, அரூரில் நடந்தது

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து தர்மபுரி, அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-02 22:43 GMT

தர்மபுரி,

இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சக்தி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் மன்னன், மின்னல்சக்தி, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் கலைவாணன், துணை செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களை பாதித்து இருப்பதால் அதை உடனடியாக நீக்க வேண்டும். பொதுமக்களின் உணவு சார்ந்த சுதந்திரத்தில் தலையிடும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

அரூர்

இதேபோன்று அரூர் தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா தலைமை தாங்கினார். பாரதிராஜா வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல செயலாளர் நந்தன் மற்றும் திருலோகு, தமிழ்அன்வர், தீத்து ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்கள். இதில் கலந்து கொண்டவர்களுக்கு மாட்டு இறைச்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது. முடிவில் பாஷா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்