மோடி ஆட்சியின் 3 ஆண்டு நிறைவு சாதனை கண்காட்சி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்

மோடி ஆட்சியின் 3 ஆண்டு நிறைவு சாதனை கண்காட்சியை சென்னையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2017-06-02 23:00 GMT
சென்னை,

மத்தியில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் சாதனை விளக்க கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம், மோடி பெஸ்ட்’ என்ற பெயரில் 3 நாள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் தொடங்கிவைத்தார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி., மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்காட்சி அரங்கில் திறன்மேம்பாடு, மக்கள் நிதித்திட்டம், பிரதமர் வீட்டு வசதித்திட்டம், பயிர்க்காப்பீட்டு திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் உஜ்வாலா திட்டம், பொன்மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தேசிய திறன் மேம்பாட்டு திட்டம்

பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற 3 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையை எட்டி இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற திட்டங்களை மோடி கொண்டு வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்த ஆட்சி மீது எந்த புகாரும் வரவில்லை. ஜி.எஸ்.டி., மேக் இன் இந்தியா, ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் நாட்டை மேலும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் மூலம் 52.8 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜன்தன் திட்டத்தின் மூலம் 28 கோடிக்கும் அதிகமான வங்கிக்கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 13 கோடி மக்கள் சமூக பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர். முத்ரா கடன் வழங்கப்படுகிறது. 2 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழிகாட்டி

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 67 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, வழங்கப்பட உள்ளது. இது மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட அரசு. மக்களுக்காகவே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். ஆயுள் காப்பீடு திட்டம், விபத்து காப்பீடு திட்டம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 கோடி பேர் இணைந்துள்ளனர். திறன் மேம்பாட்டு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

மோடியின் வளர்ச்சி பணிகளை பார்த்து உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன. மோடி ஆட்சியில் இந்தியா சிறப்பான நிலையை அடைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்